Monday, September 21, 2015

முகமது நம்மை ஆள்கின்றது!


             
              எது நம்மை ஆள்கின்றது? முகமது நம்மை ஆள்கின்றது! முகமது எப்படி நம்மை ஆளமுடியும்? முகம்+அது= முகமது இங்கு முகம் என்றால் அறிவு! அது என்றால் எதையாவது சுட்டுவது! அதாவது அறிவை சுட்டிக் காண்பிப்பது முகமாகும்! அந்த அறிவின் இருப்பிடம் சிரசாகும்! அந்த சிரசாகும் நம்மை ஆள்வது!

               ஈஸ்வரன் என்ற சொல் ஏதோ இந்து மதத்துக்காரர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று மாற்று மதத்துக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

               ஞானம் பெறுவது சுலபம்! ஞான அனுபவம் கிடைப்பது கடினம்! ஞான அனுபவம் வேண்டுமென்றால் பகிரதப் பிரயத்தனம் ஒவ்வொருத்தரும் செய்தே ஆகவேண்டும்! உழைக்காமல் எதுவும் கிட்டாது, அப்படி கிட்டினால் அது நிலைக்காது! கடன்பெற்ற ஞானம் வழிகாட்டும், ஆபத்திற்கு உதவாது! ஞான அனுபவம் கொடுக்காது! 

               ஈசனோடு இருப்பினும் ஊழ் நம்மை விடுவதில்லை! பக்தியும் பணிவும் பக்குவம் தரும்! எல்லோரும் ஞான அனுபூதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!

நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 




இதோ இயேசு நம் மூச்சாகிவிட்டார்!

               



               இதோ இயேசு நம் மூச்சாகிவிட்டார்! அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!இனி ஒருபோதும் இயேசுவால் வரமுடியாது!காரணம் அவர் சர்வ ஜீவிகளின் கர்த்தாவிடம் கலந்துவிட்டதால்!

               இயேசுவை காண வேண்டும் என்றால் மனம் திரும்புங்கள் அதாவது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்! யார் தன்னுடைய சுவாசத்தை கவனிக்கின்றானோ அவனே விசுவாசி! எவன் தன்னுடைய மனத்தை உலகப்பிரகாரமாக செலுத்துகிறானோ அவனே அவிசுவாசி!


               மொத்தத்தில் இயேசுதான் நம் மூச்சு என்பதை புரிந்து கொண்டால் ஆவி! ஆத்மா! சரீரம்! எதுவென்று புரியும்!

              சாத்தான் என்பது நம்முடைய மனத்தின் மறுபக்கம் அதாவது துர்குணமாகும்! சிலுவை நம்முடைய உடலாகும்! சிலுவைப்பாடு என்பது காம, குரோத, மோக, லோப, மத, விரோத, டம்ப, பொறாமை! இவைகளால் ஏற்படக்கூடிய இன்ப துன்பங்களாகும்! 

              இயேசு வருவார்! இயேசு வருவார்! என்று சொன்னால் தற்பொழுது நம்மை ஆள்வது யார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? ஆக ஆண்டது! ஆள்வது! ஆளப்போவது! எது என்றால் நம்மில் நம்முள் சகவுயிர்களுக்கும் உயிராய் உள்ள நித்திய ஜீவனே என்பதை புரிந்து கொள்வோம்!

             இயேசுவின் இரத்தம் என்பது நம்மூடலில் ஓடுகிற இரத்தமாகும் அதுவே சக்தி ஆம் பராசக்தி!


நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 



யார் பிரமச்சாரி?

                எல்லா உயிர்களும்! எல்லா அண்டங்களும்! பிரம்மத்தை சார்ந்து இருப்பதால் அனைவரும் அனைத்தும் பிரம்மச்சாரிகளே! அறிந்தும் அறியாமலும் நாம் அனைவரும் பிரம்மம் என்கிற இயற்கையை,வெட்டவெளியை,வெறுமையை, இறைவனை, சார்ந்து இருப்பதால் பிறப்பொக்கும் எல்லாவுயிரும் பிரம்மச்சாரிகளே! 

                பொதுவாக பிரம்மச்சாரி என்றால் சம்சார பந்தத்தை கைவிட்டவர்களை, உலக வாழ்க்கையை துறந்தவர்களை, பிரம்மச்சாரி என்று அழைப்போம்! இது தவறான கருதுகோள் எனலாம் காரணம் துறந்தவர்களையும், துய்ப்பவர்களையும், பிரம்மமே சுமப்பதால் இருசாராரும் பிரம்மச்சாரிகளே! 

                மேலும் மைதுனம் கொள்பவர்களை சம்சாரியாகவும், மைதுனம் கொள்ளாதவர்களை பிரம்மச்சாரியாகவும் பார்ப்பது நம்முடைய அறியாமையாகும்! எந்த சாமியாராக இருந்தாலும் அவருக்கும் விந்து சுரக்காமல் இருக்காது என்பதையும், எந்த பெண் சாமியாராக இருந்தாலும் அவருக்கும் கருமுட்டை வெடிக்காமல் இருக்காது என்பதையும், புரிந்து கொண்டால், மைதுனம் எவ்வுயிருக்கும் பொதுவாம் என்பதை அறிவோமானால் சாமி யார்? பிரம்மச்சாரி யார்? என்கிற கேள்விகளுக்கு விடைகிடைக்கும்! அனைவரும் அனைத்தும் பிரம்மத்தின் சாரம் என்பதும் விளங்கும்! 

நன்றி வணக்கம்!


இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 


Sunday, September 20, 2015

அகங்காரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை!

அகங்காரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
சங்காரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 

வியாபாரம் (மனத்தின்) ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
துலாபாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 

மின்சாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
சம்சாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை!

அரிதாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
அவதாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 

அடிவாரம் ஓய்ந்துவிடும் ஓங்காரம் ஓய்வதில்லை! 
ஆம் ஓங்காரம் ஓய்வதில்லை!
ஆங்காரத்தை சுமக்கும் உயிர்கள் ஓங்காரத்தை உணர்வதில்லை!

நன்றி வணக்கம்!


இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

அறம் செய்ய மறு! ஆத்திரம் கொள்! இச்சைப்படி நட!

                அறம் செய்ய மறு! ஆத்திரம் கொள்! இச்சைப்படி நட! ஈவது கூடாது! உப்பிட்டவரை மற! ஊழல் புரி! எதிர்த்து பேசு! ஏய்க்க பழகு! ஐந்து மாபாதகம் செய்! ஒன்றுபட விடாதே! ஓதுவதை கெடு! ஔவை சொல் மீறு!!! 

               ஒரு வேளை! இப்படி சிறுவயதிலேயே நமக்கு மேற்கூறிய நீதி நெறிகள் போதிக்கப் பட்டிருந்தால் தற்பொழுது நீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்படும் தீர்ப்புகள் நடுநிலையாளர்களையும், வாய்மையே வெல்லும் என்று நம்பிக் கொண்டிருப் பவர்களுக்கும், உண்மை விரும்பிகளுக்கும் ஒரு மனநிறைவை தந்திருக்கும் என்பது எம்முடைய தாழ்மையான கருத்து.

              நமக்கு போதித்த நீதி நெறிகள் நடைமுறைக்கு பயன்படாமல் போன இந்த முரண்பாடுதான் மனிதகுலத்தின் சாபக்கேடு என்றால் அது மிகையாகாது.

             வலியது வெல்லும் என்கிறார்கள் அந்த வலியது தீயதில் என்றால் வாய்மையே தோற்றுப் போகும் என்பதுதானே பொருள்?
             ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும், சட்டமும் சட்டவிரோதமும் ஒன்றாகத்தான் பயணிக்கின்றன!
            இந்த பூமியில் பாவப்பட்ட பயணி மனிதன் மட்டுமே!மேற்கூறியவைகளில் சிக்கித் தவிக்கிறான்! இயற்கையின் நீதியை மாற்ற முயல்வதும் ஆள நினைப்பதும் அறியாமையே என்பது காலம் போகப்போக நமக்குணர்த்தும் உண்மை! 
             எதையும் பணத்தால் சாதிக்க முடியும் என்றால் உலகம் இன்றைக்கு அமைதிப் பூங்காவாக ஆனந்ததின் எல்லையாக அல்லவா மாறியிருக்க வேண்டும்? ஏன் மாறவில்லை?
நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 

மூத்திரத்தை குடிநீராக குடிக்க முயல்வீர்கள் இல்லையா?

             குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத தேசத்தில் நீங்கள் உங்கள் தண்ணீர் தாகத்தை தணித்துக்கொள்ள கடைசி ஆயுதமாக உங்களுடைய மூத்திரத்தை குடிநீராக குடிக்க முயல்வீர்கள் இல்லையா?


              அதுபோலத்தான் இந்த உலகத்தில் நீங்கள் உண்பதற்கு ஏதுவாக காய்களும், கனிகளும், விதைகளும், மரங்களும், தாவரங்களும் படைக்கப்பட்டு இருக்கின்றன! 


               மேற்கூறிய பச்சைத்தாவரங்கள் தானியங்கள் அனைத்தும் சுமார் 12 வருடங்கள் மழையின்மையின் காரணமாக அழிந்து போகுமாயின் அப்பொழுது நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள இன்னொரு உயிரை கொன்று புசிப்பீர்கள் அல்லவா? அங்குதான் இறைவனுடைய இரைதர்மம் மாறுபடுகிறது! 

               ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ (இயற்கையோ) இப்பொழுது மேற்கூறிய பச்சைக்காய்கறிகள் அனைத்தும் நமக்கு வழங்கி வாழவைத்துக்கொண்டிருக்கிறது இல்லையா? இந்த சமையத்தில் மற்றொரு உயிரை கொல்ல முயல்வதும் அதனை சமைத்து உண்பதும் சத்தியத்திற்கு நேர்ரெதிராக அல்லவா உள்ளது? 


               எந்த மகான்களும் அவசியமின்றி அசைவத்தை போதித்திருக்க மாட்டார்கள்!

               இதைத்தான் புலால் மறுத்தானை இந்த உலகத்துயிர்கள் கைகூப்பித் தொழும் என்று பொதுமறை நமக்கு போதிக்கின்றதே இந்த அறத்தை உங்களால் மறுக்க முடியுமா?


               இறையருளால் பூமியில் நம் எல்லோருக்கும் எல்லாம் உள்ளதை மறந்துவிடாதீர்கள்! 


               இனி உங்கள் விருப்பம்.... உயிர்பலியிடுவதும் அல்லது உயிர்களை காப்பாற்றுவதும்...... காரணம் நீங்கள் எதை விதைப்பீர்களோ அதையே அறுப்பீர்கள்! 

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

நன்றி வணக்கம்!


இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 





ஓம் என்ற சப்தம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!



                  ஓம் என்ற சப்தம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது! அந்த சப்தம் வெளியில் இல்லை, உள்ளே! என்று கவனித்தவர்கள் தியானிக்க முயல்கிறார்கள் கவனிக்க முடியாதவர்கள் பாவம் போர் அடிக்கிறது என்கிறார்கள்!

                   தவம் பழகினால் நான் என்கிற செருக்கு குறைவதை உணரலாம்! அப்படி பழகிக்கொண்டே வரும்போது எங்கே இந்த பூமியில் அடையாளம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து நம்முடைய நான் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது! ஆனால் ஒரு தவசி தன்னுடைய அகங்காரத்தின் புலம்பலை மனம் சித்தம் புத்தியைக்கொண்டு சிகிச்சை அளித்து சமாதானத்திற்கு ஏற்பாடு செய்கிறார்! 

                  பாவம் தவமே கைகூடாதவர்களுக்கு தன்னுடைய நான் வழிப்பட்டு மனம் சித்தம் புத்தியை துலைத்துவிடுவார்கள்! இதுதான் தவசீலர்களுக்கும் பாமரர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு! மனமே அனைத்திற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறது!

                     இறைவன் மின்சாரம்! என்றால் இறைவி! மின்சாரத்தை கடத்தும் கம்பி எனலாம்! நம்முடைய மனமே மின்சாரத்தை பாதுகாப்பதும் செலவழிப்பதும் அதற்கான கருவிதான் மெய் வாய் கண் செவி மூக்கு இது பிறப்பொக்கும் எல்லாவுயிருக்கும் பொருந்தும்!

                     இந்த உண்மையை தனக்குள்ளே கடந்து பார்க்கவே கட+ உள் என்றார்கள்! ஏன் கட வுள் என்று சொல்லவேண்டும் இறைவன் உயிராக அதாவது மின்சாராமாக அனைத்து உயிர்களுக்கும் உயிராக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளவே கட வுள் என்ற வினைச் சொல்லை பயன்படுத்தினார்கள்! அப்படி தவம் செய்து அந்த மின்சாரத்தை புரிந்து கொண்டவர்கள் எவ்வுயிரும் தம்முயிரே என்பதை உணர்ந்து கொண்டார்கள்!

                   உணராதவர்கள் இறைவனை தேடியே மாண்டு போனார்கள் என்பதுதான் உண்மை!


நன்றி வணக்கம்!

 இப்படிக்கு!
 பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!