Saturday, October 3, 2015

காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா?



               காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா? என்னடா பட்டிமன்ற தலைப்பு மாதிரி இருக்கே என்று நீங்கள் யோசிப்பது எமக்கு புரிகிறது! வாதம் புரிந்தாலும் வழிகிட்டாது! கடிதம் வரைந்தாலும் வழிகிட்டாது! என்பதை யாம் அறிவோம்! அதாவது காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது சாயக்கழிவும் கழிவுநீரும் இரண்டுமே என்றால் அது மிகையாகாது! 

              சரி இந்த புனித நீரால் ஏற்படும் நன்மைகள் என்ன ? இந்த புனித நீர் எந்த ஏரியில் கலக்கிறது என்பது குறித்து பார்ப்போம்!

              காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு  திருக்காளிமேடு வழியாக பயணித்து   நத்தப்பேட்டை எனும் விவசாய ஏரிப்பாசன நீரில் கலக்கிறது! அந்த ஏரி நிறைந்து நாசமாகி அந்த புனித நீரால் விவசாயம் கெட்டு கலியனூர் மண்ணும் கெட்டு கடைசியில் மடைமாற்றம் செய்யப்பட்டு எங்கள் பூசிவாக்கம் கிராமத்துக்கு சொந்தமான ஏரியில் வந்து அந்த புனித நீர் கலக்கிறது! 

              ஏற்கனவே ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் ஏரிநீரும் மண்ணும் மாறுவதற்கே பலநூறு வருடம் பிடிக்கும். இந்த தருவாயில் மீண்டும் தற்பொழுது காஞ்சிபுரத்திலிருந்து வரும் இந்த கழிவுநீரால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ  மண்ணின் நிறம் மாறுவதற்கு? யாரரிவார்? 

              எங்க ஊர் மண்ணோ  முக்கால்வாசி கெட்டுவிட்டது இதை யார் ஈடு செய்ய போகிறார்கள் ? 

              எங்க ஊர் ஏரியும் சாயக்கழிவால் நிறைந்து நாசமானது போதாமல் அடுத்து பலியாக போவது ஊத்துக்காடு ஏரி என்றால் அது மிகையாகாது! காஞ்சிபுரத்திலிருந்து வருவது கழிவு நீரோ..... சாயக்கழிவோ.....

பாழாய் போனதே விளைநிலங்கள்! 
பாழாய் போனதே எங்கள் ஊரின் சுற்றுப்புற சூழல்! 
பாழாய் போனதே நிலத்தடி நீர்! 


              கேட்பதற்கு நாதியில்லை! பதில் சொல்ல யாருமில்லை!
என்பதை யாமறிவோம்! இருப்பினும் இப்பொழுது இதை யாம் பதிவு செய்யாவிட்டால் வருங்கால சமுதாயம் எம்மை கேள்விகேட்குமே என்பதற்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து மண்வளத்தை காப்பார்கள் என்கிற நம்பிக்கையில் யாம் இங்கே பதிவு செய்கிறோம்! 

               இனி வருங்காலத்தில் எங்க ஊரில் விவசாயம் செய்ய முடியாது இது திண்ணம்! எப்பொழுது விவசாயத்தை புறக்கணிக்கின்றோமோ அப்பொழுதே அழிவு ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்!                     

               நிமிர்ந்து நில்!
              துணிந்து கேள்! 
              ரெளத்திரம் பழகு! 
     
              என்கிற வரிகளின் அர்த்தம் எப்பொழுது எங்க ஊர் இளைஞர்களுக்கு புரியப்போகிறதோ? யாம் அறியோம் பராபரமே! 

             இறைவா இந்த கழிவுநீரால் நாசமாகும் எங்கள் மண்ணை காப்பாற்ற வழிகாட்டு! மனிதனுக்கு மனுப்போட்டா நடவாது என்பதற்காகவே! இறைவனிடம் இந்த விண்ணப்பத்தை சமர்பிக்கிறோம்! 

மண்ணின்றி விவசாயமில்லை! 
விவசாயமின்றி அரசுமில்லை! 
கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


No comments:

Post a Comment