Saturday, October 3, 2015

காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா?



               காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது கழிவு நீரா? சாயக்கழிவா? என்னடா பட்டிமன்ற தலைப்பு மாதிரி இருக்கே என்று நீங்கள் யோசிப்பது எமக்கு புரிகிறது! வாதம் புரிந்தாலும் வழிகிட்டாது! கடிதம் வரைந்தாலும் வழிகிட்டாது! என்பதை யாம் அறிவோம்! அதாவது காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது சாயக்கழிவும் கழிவுநீரும் இரண்டுமே என்றால் அது மிகையாகாது! 

              சரி இந்த புனித நீரால் ஏற்படும் நன்மைகள் என்ன ? இந்த புனித நீர் எந்த ஏரியில் கலக்கிறது என்பது குறித்து பார்ப்போம்!

              காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு  திருக்காளிமேடு வழியாக பயணித்து   நத்தப்பேட்டை எனும் விவசாய ஏரிப்பாசன நீரில் கலக்கிறது! அந்த ஏரி நிறைந்து நாசமாகி அந்த புனித நீரால் விவசாயம் கெட்டு கலியனூர் மண்ணும் கெட்டு கடைசியில் மடைமாற்றம் செய்யப்பட்டு எங்கள் பூசிவாக்கம் கிராமத்துக்கு சொந்தமான ஏரியில் வந்து அந்த புனித நீர் கலக்கிறது! 

              ஏற்கனவே ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட எங்கள் ஏரிநீரும் மண்ணும் மாறுவதற்கே பலநூறு வருடம் பிடிக்கும். இந்த தருவாயில் மீண்டும் தற்பொழுது காஞ்சிபுரத்திலிருந்து வரும் இந்த கழிவுநீரால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ  மண்ணின் நிறம் மாறுவதற்கு? யாரரிவார்? 

              எங்க ஊர் மண்ணோ  முக்கால்வாசி கெட்டுவிட்டது இதை யார் ஈடு செய்ய போகிறார்கள் ? 

              எங்க ஊர் ஏரியும் சாயக்கழிவால் நிறைந்து நாசமானது போதாமல் அடுத்து பலியாக போவது ஊத்துக்காடு ஏரி என்றால் அது மிகையாகாது! காஞ்சிபுரத்திலிருந்து வருவது கழிவு நீரோ..... சாயக்கழிவோ.....

பாழாய் போனதே விளைநிலங்கள்! 
பாழாய் போனதே எங்கள் ஊரின் சுற்றுப்புற சூழல்! 
பாழாய் போனதே நிலத்தடி நீர்! 


              கேட்பதற்கு நாதியில்லை! பதில் சொல்ல யாருமில்லை!
என்பதை யாமறிவோம்! இருப்பினும் இப்பொழுது இதை யாம் பதிவு செய்யாவிட்டால் வருங்கால சமுதாயம் எம்மை கேள்விகேட்குமே என்பதற்காகவும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து மண்வளத்தை காப்பார்கள் என்கிற நம்பிக்கையில் யாம் இங்கே பதிவு செய்கிறோம்! 

               இனி வருங்காலத்தில் எங்க ஊரில் விவசாயம் செய்ய முடியாது இது திண்ணம்! எப்பொழுது விவசாயத்தை புறக்கணிக்கின்றோமோ அப்பொழுதே அழிவு ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்!                     

               நிமிர்ந்து நில்!
              துணிந்து கேள்! 
              ரெளத்திரம் பழகு! 
     
              என்கிற வரிகளின் அர்த்தம் எப்பொழுது எங்க ஊர் இளைஞர்களுக்கு புரியப்போகிறதோ? யாம் அறியோம் பராபரமே! 

             இறைவா இந்த கழிவுநீரால் நாசமாகும் எங்கள் மண்ணை காப்பாற்ற வழிகாட்டு! மனிதனுக்கு மனுப்போட்டா நடவாது என்பதற்காகவே! இறைவனிடம் இந்த விண்ணப்பத்தை சமர்பிக்கிறோம்! 

மண்ணின்றி விவசாயமில்லை! 
விவசாயமின்றி அரசுமில்லை! 
கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


Friday, September 25, 2015

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு...




பெறுநர்: 

                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள், 
                புது தில்லி-110001 
                WWW.narendramodi.in www.facebook.com/narendramodi             
                www.twitter.com/narendramodi 


                மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு, 
பூசிவாக்கம் கிராம பொதுமக்களின் பணிவான வணக்கங்கள்! தங்களுடைய நலனை காக்க எல்லாம் வல்ல இயற்கை அன்னை துணை நிற்பாள் என்று பரிபூரணமாக நம்புகிறோம்! 

               ஐயா இந்த கடிதத்தின் மையநோக்கம் என்னவென்றால் எங்கள் கிராமத்தின் வழியாக பயணிக்கும் காஞ்சிபுரம் சென்னை செல்லும் ரயில்கள் எங்கள் ஊரில் நின்று செல்ல ஏதுவாக ஒரு இரயில்வே நிலையம் அமைக்க வேண்டிதான் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறோம் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம் ஐயா! 

                எங்கள் ஊரில் இரயில் நிலையம் அமையுமானால் அருகிலுள்ள நெய்க்குப்பம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், பாவாசாகிப்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, புதுப்பேட்டை, ஏகனாம்பேட்டை, நாயகன்பேட்டை, தாங்கி, வில்லிவலம், கிராமவாழ் பயணிகளுக்கு சென்னைக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகவும் பணிவன்புடன் சுட்டிக்காட்டுகிறோம் ஐயா! 

               மேற்கூறிய கிராம பொதுமக்களின் சார்பாகவும் எங்கள் ஊர் சார்பாகவும் இந்த கடிதத்தை விண்ணப்பமாக ஏற்று இந்திய ரயில்வே துறைக்கு தங்களுடைய பரிந்துரையின் கண் எங்கள் ஊருக்கு இரயில் நிலையம் ஒன்றை அமைத்து பயணிகளின் சிரமத்தை குறைப்பீர்கள் என்று நம்பியே இந்தக்கடிதத்தை தங்களின் திருப்பார்வைக்கு அனுப்பிவைக்கிறோம்! 

வாழ்க பாரதம்! 
வாழ்க தேசியம்! 
வாழ்க தமிழகம்! 
வாழ்க தமிழர்கள்! 

இப்படிக்கு......
                                                                                                                                                                    பூசிவாக்கம் கிராமபொதுமக்கள்! 
எண்.82,பூசிவாக்கம், 
ஏகனாம்பேட்டை அஞ்சல், 
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு. 
இந்தியா. 
தபால் பெட்டி எண்:631601

Thursday, September 24, 2015

விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது!

              



                  விவசாயத்தை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு நாடும் வல்லரசு ஆகமுடியாது! எப்பொழுது விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களோ அன்றைக்கே அந்த நாடும் மதிக்கப்படும்! விவசாயிகளை புறந்தள்ளிவிட்டு மற்றதுறைகளை வருமானத்திற்காக விருது கொடுத்து வளர்த்தாலும் வீழ்ச்சியே விளையும்! 

                 யார் நம்முடைய வயிற்றுக்காக   உழைக்கிறார்களோ   அவர்களுக்கு  பாதுகாப்பு கொடுங்கள்! சிறப்பு அடையாள அட்டை கொடுங்கள்! மிகப்பெரிய விருது கொடுங்கள்! வட்டியில்லா கடன் கொடுங்கள்! குறைந்தபட்சம் ஊர்புறங்களுக்கு வந்து ஊக்கமாவது கொடுங்கள்! முதலில் விவசாயிகளுக்கு மரியாதை கொடுங்கள்!  
மற்ற எல்லா துறையும் தானாக வளரும்!

                  மண்ணுக்குண்டானவர்களை மதிக்க தவறினால்..... விரைவில் அந்த நாடு அழியும்! மண்ணையும் மக்களையும் காக்கமுடியாத பட்சத்தில் விபச்சாரம் பெருகும், கலகநாசம் உண்டாகும், மதுவும் மாதும் மக்களை ஆட்சி செய்யும், அரசு அழியும்! வறுமை வாட்டும்! கள்ளப்பணம் பெருகும்! கறுப்பு பணம் கைமாறும்! மந்திர தந்திரங்கள் வலுபெரும்! ஆத்மீகம் அரசியல் அறம் தவறி நாசமடையும்! பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் இருப்பார்கள்! ஆதலால் ஒரு அரசாங்கம் எப்பாடுபட்டாவது விவசாயிகளை காக்கவேண்டும் என்பதுதான் எம்முடைய பணிவான வேண்டுதல்!

                     டாக்டருக்கு அரசாங்க ஊழியருக்கு, தனியார் துறை ஊழியருக்கு, பெண்தருகிறார்கள்! விவசாயம் செய்பவருக்கு பெண் கொடுக்க மறுக்கும் ஒரு கேவலமான நிலைமையை யாம் உணர்கிறோம்! குறிப்பா சொல்லப்போனால் பெண்கள் இல்லாமல் விவசாயத்தை நினைத்துகூட பார்க்க முடியாது எனலாம்! ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழே மாறிவருகிறது! இப்பொழுதெல்லாம் கிராமத்து பெண்களை ஏற்றிச்செல்ல கம்பெனி வேன்கள் ஊருக்குள் வருவதை முன்னேற்றமாகப் பார்ப்பதா வருங்காலத்தில் வர இருக்கம் ஆபத்தாக பார்ப்பதா என்று எம்மால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை! 

                    பெண்கள் விவசாயத்தை மறப்பார்களானால் பேரழிவு நிச்சையம்! இந்த நிலை நீடித்தால் மண்ணெல்லாம் பொன்னாகாது, பிளாட்டாகும்! என்று கூறி விடைபெறுகிறோம்! கூடுமானவரை மண்ணையும் உழைக்கும் மக்களையும் காப்பாற்றுவோம்!

வானின்றி நீரில்லை!

நீரின்றி உலகமில்லை! 

மண்ணின்றி விவசாயமில்லை! 

விவசாயமின்றி அரசுமில்லை! 

கவனத்தில் கொள்வோமாக! 

நன்றி வணக்கம்! 
இப்படிக்கு 

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!


Tuesday, September 22, 2015

வணக்கம் பண்பலைக்கு ஓர் கடிதம்!

     


                வணக்கம் பண்பலைக்கு வணக்கம்! கடந்த நான்கைந்து நாட்களாக இணையத்தின் ஊடாக வணக்கம் பண்பலை கேட்க நேர்ந்தது! ஒரிரு நிகழ்ச்சிகள் மட்டுமே கேட்க முடிந்தது! 

                அந்த வகையில் தூங்க நகரம் நிகழ்ச்சி மட்டுமே எங்களுக்கு பகலில் கேட்ககூடிய நிகழ்ச்சி! மற்ற நிகழ்ச்சிகள் ஒரு சில நிமிடம்தான் எம்மால் கேட்க முடியும்!

               தமிழ்நாட்டில் தமிழ் பண்பலைகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம்! இருப்பினும் கடல்கடந்து கேட்கும்போது ஏதோவொன்று எம்மை ஈர்க்கவே செய்கிறது! கேட்க இனிமையாக இருக்கிறது!

               பொதுவா கேட்பவருக்கு விருப்பம் இல்லையென்றால் எவ்வளவு நுட்பமான இசையென்றாலும் இரைச்சலாகத்தான் கேட்கும்! தொகுப்பாளர்கள் முழு ஈடுபாடுடன் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பப்படும்! 

               இயந்திரத்தனமான தொகுப்பாளர் ஒரு கூலி ஆள்மட்டுமே! இயல்பான ஒரு தொகுப்பாளர் எந்தப்பாடலை ஒலிபரப்பினாலும் இனிமையே!

               வணக்கம் பண்பலையில் பணியாற்றும் அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெறுகிறேன்!

பெருமை கொள் தமிழா!

வாசகம் உற்சாகம்!

 அருமை!

நன்றி வணக்கம்!

இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 




Monday, September 21, 2015

ஆழம் பார்த்தவன் கடலை ஆள்கிறான்! கரைகண்டவன் கடவுளாகிறான்!



              ஆரம்பத்தில் அவன் கடலைக்கண்டு அஞ்சினான்! இந்த பூமியைவிட பரப்பளவில் பெரியது என்பதால்! சரி கடலில் இறங்கித்தான் பார்க்கலாம் என்றால் ஆழத்தை கண்டு அஞ்சினான்! 

             சரி கடலை கடந்துவிடலாம் என்று அவன் நினைத்தபோது வானத்தை தொட்டு காட்சியளிக்கும் கடலை பார்த்ததும் ஆகா நாம கரையேரவே முடியாது என்று முடிவு செய்துவிட்டான்! 

              இப்படி பயந்து கொண்டிருந்த அவன் ஒரு நாள் சிந்திக்க துவங்கினான்! இந்த பூமியைவிட பரப்பளவில் கடல் பெரியதாக இருந்தாலும் அந்த கடலை சுமப்பது இந்த பூமி என்பதை உணர்ந்து கொண்டான்!

             கடலின் ஆழத்திற்க்கும் ஒரு எல்லை உண்டு என்பதை புரிந்து கொண்டான்! கடல் கடந்தான் கரைக்கண்டான் கரையேறினான்! 

             இந்த கடலின் அனைத்து குணங்களையும் கொண்டவள்தான் பெண் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்! பயந்தவனை பெண் என்கிற கடல் மெல்ல கொன்றுவிடுகிறது! 

            துணிந்தவனை எதிர்நீச்சல் தெரிந்தவனை பெண் என்னும் கடல் மெல்ல அவனை கரை சேர்த்துவிடுகிறது! 

            ஆழம் பார்த்தவன் கடலை ஆள்கிறான்! கரைகண்டவன் கடவுளாகிறான்!


நன்றி வணக்கம்!

இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 


முகமது நம்மை ஆள்கின்றது!


             
              எது நம்மை ஆள்கின்றது? முகமது நம்மை ஆள்கின்றது! முகமது எப்படி நம்மை ஆளமுடியும்? முகம்+அது= முகமது இங்கு முகம் என்றால் அறிவு! அது என்றால் எதையாவது சுட்டுவது! அதாவது அறிவை சுட்டிக் காண்பிப்பது முகமாகும்! அந்த அறிவின் இருப்பிடம் சிரசாகும்! அந்த சிரசாகும் நம்மை ஆள்வது!

               ஈஸ்வரன் என்ற சொல் ஏதோ இந்து மதத்துக்காரர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று மாற்று மதத்துக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

               ஞானம் பெறுவது சுலபம்! ஞான அனுபவம் கிடைப்பது கடினம்! ஞான அனுபவம் வேண்டுமென்றால் பகிரதப் பிரயத்தனம் ஒவ்வொருத்தரும் செய்தே ஆகவேண்டும்! உழைக்காமல் எதுவும் கிட்டாது, அப்படி கிட்டினால் அது நிலைக்காது! கடன்பெற்ற ஞானம் வழிகாட்டும், ஆபத்திற்கு உதவாது! ஞான அனுபவம் கொடுக்காது! 

               ஈசனோடு இருப்பினும் ஊழ் நம்மை விடுவதில்லை! பக்தியும் பணிவும் பக்குவம் தரும்! எல்லோரும் ஞான அனுபூதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!

நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்! 




இதோ இயேசு நம் மூச்சாகிவிட்டார்!

               



               இதோ இயேசு நம் மூச்சாகிவிட்டார்! அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!இனி ஒருபோதும் இயேசுவால் வரமுடியாது!காரணம் அவர் சர்வ ஜீவிகளின் கர்த்தாவிடம் கலந்துவிட்டதால்!

               இயேசுவை காண வேண்டும் என்றால் மனம் திரும்புங்கள் அதாவது உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்! யார் தன்னுடைய சுவாசத்தை கவனிக்கின்றானோ அவனே விசுவாசி! எவன் தன்னுடைய மனத்தை உலகப்பிரகாரமாக செலுத்துகிறானோ அவனே அவிசுவாசி!


               மொத்தத்தில் இயேசுதான் நம் மூச்சு என்பதை புரிந்து கொண்டால் ஆவி! ஆத்மா! சரீரம்! எதுவென்று புரியும்!

              சாத்தான் என்பது நம்முடைய மனத்தின் மறுபக்கம் அதாவது துர்குணமாகும்! சிலுவை நம்முடைய உடலாகும்! சிலுவைப்பாடு என்பது காம, குரோத, மோக, லோப, மத, விரோத, டம்ப, பொறாமை! இவைகளால் ஏற்படக்கூடிய இன்ப துன்பங்களாகும்! 

              இயேசு வருவார்! இயேசு வருவார்! என்று சொன்னால் தற்பொழுது நம்மை ஆள்வது யார் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? ஆக ஆண்டது! ஆள்வது! ஆளப்போவது! எது என்றால் நம்மில் நம்முள் சகவுயிர்களுக்கும் உயிராய் உள்ள நித்திய ஜீவனே என்பதை புரிந்து கொள்வோம்!

             இயேசுவின் இரத்தம் என்பது நம்மூடலில் ஓடுகிற இரத்தமாகும் அதுவே சக்தி ஆம் பராசக்தி!


நன்றி வணக்கம்!
இப்படிக்கு!

பூசிவாக்கம் பிரம்மஸ்ரீ நடராஜன் சிவம்!